மக்களே தடுப்பூசி போடுங்க…தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 8 வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்!

தமிழகம்:சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2000 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் நேற்று 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் உள்பட 6,000 மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. சென்னை ரிப்பன் மாளிகையில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.அமைச்சர் சேகர்பாபு மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.இதனையடுத்து,செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது:

“சென்னையில் இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தவும்,மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று காய்ச்சல், சளி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.தமிழகத்தில் தற்போது 70 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.

நாளை 50 ஆயிரம் இடங்களில் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.நவம்பர் இறுதிக்குள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது”,என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று 50,000 இடங்களில் 8 வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.அந்த வகையில்,சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2000 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக,இரண்டாவது தவணை தடுப்பூசி போடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.