இந்தந்த மாவட்டங்களுக்கு நாளை முழு ஊரடங்கு – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!

கொரோனா அச்சுறுத்தலை காரணமாக திருவாரூர், கடலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் குறையாமல் அதிகரித்து வருவதால், நாளையுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு, மேலும் 2 வாரத்திற்கு அதாவது மே 17 வரை நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. அதுபோல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலமாக பிரித்து அதற்கான நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், சென்னையில் அதிக அளவாக 1,082 பேரும், தொடர்ந்து கோவையில் 141 பேரும், திருப்பூரில் 112 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் 28 ஆக உள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். இதனால் நகரில் மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். இதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுபோன்று அரியலூர் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கடலூர், திருவாரூரை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலும் நாளை முழுமையான ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவாரூர், கடலூர், அரியலூரை தொடர்ந்து தஞ்சையிலும் நாளை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 4 மாவட்டங்களில் மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளார். இந்த ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சிவப்பு மண்டலத்தில் தஞ்சாவூர், திருவாரூர், ஆரஞ்சு மண்டலத்தில் கடலூர் மற்றும் அரியலூர் இருக்கின்றது. இதற்கு முன் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்