இன்று முதல் பெண் பயணிகளுக்கு இலவச பயணச்சீட்டு விநியோகம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள மாநகரப் பேருந்துகளில் இன்று முதல் மகளிருக்கான இலவச பயண சீட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் அரசு பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற அன்றைய தினமே பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டு, அத்திட்டம் அமலுக்கு வந்தது.

கடந்த மே மாதம் 8ம் தேதி முதல் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பெண்களை தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு இன்று முதல் பேருந்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும் என்று போக்குவரத்துறை அறிவித்துள்ளது. எந்தெந்த வழித்தடத்தில் எத்தனை பேர் பயணித்தனர் என்பதை கண்டறிய பயணச்சீட்டு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சாதாரண பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் தங்களுக்கான இலவச பயண டிக்கெட்டை நடத்துனரிடம் பெற்று கொள்ள வேண்டும் என்றும் சோதனையின் போது டிக்கெட் இல்லையெனில் அபராதம் செலுத்த நேரிடும் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்