பேருந்தில் இலவச பயணம்.. பெற்றோர்கள் விரும்பினால் இதனை செய்துகொள்ளலாம் – போக்குவரத்துத்துறை

பேருந்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்
கடந்த சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், பேருந்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 5ம் தேதி போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையின்போது, 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரைக் கட்டணம் பெறுவதற்கு பதிலாக, இனிவரும் காலங்களில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் எதும் பெறப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அரைக் கட்டணம் பெற வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைசசர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான பயணச்சீட்டு இரத்து பற்றி பொதுமக்கள் சிலரின் கருத்துகள் மற்றும் சந்தேகங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனால், பொதுமக்கள் சிலர் தங்களது குழந்தைகளை மடியில் அழைத்து செல்வது அசௌகரியம் ஏற்படும் எனவும் விருப்பமுள்ளவர்கள் தங்களது 3 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு பயணச்சீட்டு பெற்று பயணிப்பது தேவை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போதும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக முன்பதிவு செய்யும் முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது குழந்தைகளுக்கு முன்பதிவு செய்து பயணிக்கும் நடைமுறை தொடர்ந்து இருக்கும். மேலும், பயணிகள் பயணிக்கும் போது அவர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளுக்கு இருக்கை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும். எனவே, தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன விதிகளில் அரைக்கட்டணம சம்மந்தமாக, 3 வயது முதல் 12 வயது என்பதற்கு பதிலாக, 5 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அரைக்கட்டணம் வசூலிக்கலாம் என உரிய முறையில் திருத்தங்கள் செய்யப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்