ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்புக… நவ.26ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், தஞ்சை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் எனவும் கூறப்பட்டது. மேலும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியகுமார் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

20 மாவட்டங்களில் மழை தொடரும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழ்நாடு முழுவதும் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 26-ம் தேதி அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. நவம்பர் 26-ல் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அந்தமான் கடல் பகுதிகளில் 27ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என தெரிவித்தார்.

இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் நவம்பர் 26க்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் திருப்பூரில் 17 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. தமிழகத்தில் 15 இடங்களில் கனமழையும், 5 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மேலும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்