முதலில் 1,30,000 ரசிகர்களை அமைதியாக்குவதே எங்களது நோக்கம்- பேட் கம்மின்ஸ்..!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி  நாளை நடைபெறுகிறது. இதற்கிடையில் செய்தியாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், “சிறப்பான ஆடுகளமாக அகமதாபாத் இருக்கும் என நம்புகிறோம். ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சிறந்த வீரர்கள். ஆனால் நாளை ஆட்டத்தில் அவர்களுக்கு என தனி திட்டம் எதுவும் இல்லை. உலக கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

இந்த போட்டியில் டாஸ் ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கும். நாங்கள் போட்டியின் நிலைமையை தகுந்தவாறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த பார்ப்போம். சொந்த மண்ணில் விளையாடுவது ஒரு அணிக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாங்களும் இங்கே நிறைய விளையாடி உள்ளோம். 2015 ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை வென்றது தான் என்னுடைய கரியரின் உச்சபட்ச தருணம். நாளை நாங்கள் கோப்பையை வென்றால் அதுதான் எனது கரியரின் புதிய உச்சபட்ச தருணமாக இருக்கும்.

அகமதாபாத்தில் கூட போகும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்களும் ஒரு தலைப்பட்சமாக இந்தியாவை தான் ஆதரிக்கப்போகிறார்கள். ஆனால் ஒரு பெரிய கூட்டத்தை ஆர்ப்பரிப்பின்றி  அமைதிப்படுத்துவதை விட திருப்தியான விஷயம் வேறு எதுவும் இருக்காது. நாளை எங்களின் இலக்கு அதுதான்.

முதல் போட்டியில் நாங்கள் முகமது ஷமியை எதிர்கொள்ளவில்லை. அவர் மிகவும் சிறப்பாக ஆடி இருக்கிறார். வலது, இடது என இரண்டு விதமான பேட்டர்களுக்கும் நன்றாக பந்து வீசி இருக்கிறார். அவரை எதிர்கொள்வதுதான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்” என தெரிவித்தார். சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா  ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

author avatar
murugan