பிப். 4-க்குள் அரியர் தேர்வுக்கான அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு.!

பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் அரியர் தேர்வுக்கான அட்டவணையை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியர் தேர்வுக்கான அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் அடுத்த மாதம் பிப். 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழக கல்லுரிகளில் இறுதி பருவ தேர்வு தவிர, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களின் அரியர் தேர்வுகளும் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் வழக்கு தொடுத்தனர். இதனிடையே, அரியர் தேர்வுகளை நடத்தாமலேயே முடிவுகளை சில பல்கலைக்கழகங்கள் வெளியிட்டதாக கூறி, ராம்குமார் மீண்டும் ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அரியர் தேர்வை கட்டாயம் நடத்தவும், தேர்வே நடத்தாமல் முடிவுகளை வெளியிடவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாணைக்கு வந்த நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவின்படி பல்கலைகழகங்கள் தேர்வுகளை நடத்த முடிவு செய்திருப்பதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் அரியர் தேர்வுக்கான அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்