கடித்த நாயை அடித்து கொன்ற தந்தை, மகன் இருவரும் கைது…!

தன்னை கடித்த அண்டை வீட்டுக்காரரின் நாயை அடித்து கொன்ற தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் கோட்டை பட்டி எனும் கிராமத்தை சேர்ந்த முனியசாமி மற்றும் நாகராஜ் ஆகிய இருவரது வீட்டிலும் நாய் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி இந்த இரண்டு நாய்களும் சண்டையிட்டுக் கொண்ட பொழுது, அதனை விலக்கி இழுத்து செல்ல முயன்ற நாகராஜை முனியசாமியின் நாய் கடித்து வைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், அவரது மகனுடன் இணைந்து மரக்கம்பு மற்றும் கற்களை கொண்டு முனியசாமியின் நாயை தாக்கியுள்ளனர்.

அதனால் அந்த நாய் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது நாயை அடித்துக் கொன்றதாக நாகராஜ் மீது முனியசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் எழுதி வாங்கிவிட்டு அனுப்பியதால், முனியசாமி விலங்கின பாதுகாப்பு அமைப்பில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் நாயை கொன்ற நாகராஜ் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.