குரங்கணி வனப்பகுதியில் தீயில் சிக்கியவர்களை துரிதமாக அதிகாரிகள் செயல்பட்டு மீட்பு!

தீயில் சிக்கியவர்களையும், தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களையும், குரங்கணி வனப்பகுதியில்  துரிதமாக செயல்பட்டு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றபோது, குரங்கணி வனப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது. கொழுக்குமலையில் இருந்து மீண்டும் குரங்கணிக்கு அவர்கள் திரும்பியபோது, காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதை பார்த்து, அதனுடன் செல்போன்களில் செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது, அவர்கள் எதிர்பார்க்காத நிலையில், காட்டுத்தீ மளமளவென அவர்களை சூழ்ந்துள்ளது. அப்போது, அலறியடித்து ஓடிய அவர்கள், பள்ளங்களில் விழுந்துள்ளனர்.

அவர்கள் அதில் இருந்து வெளியேற முடியாத நிலையில்தான், அவர்களையும் காட்டுத் தீ சூழ்ந்துள்ளது. இது குறித்த தகவல் வனக் காவலர்கள் மூலம், தேனி மாவட்ட எஸ்.பி.க்கு நேற்று மாலை கிடைத்துள்ளது. நிலைமையை புரிந்து கொண்ட தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், 25 காவலர்களுடன் கொழுக்குமலை வனப்பகுதிச் சென்றுள்ளார். மேலும், வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் வருவதற்குள் தீப்பிடித்த கொழுக்குமலை வனப்பகுதியை அடைந்த மாவட்ட எஸ்.பி. மற்றும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, 4 பேரை மீட்டுள்ளனர்.

சற்றுநேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையும், தீயணைப்புத்துறையும் மீட்புப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உத்தரவின் பேரில், கொழுக்குமலை பகுதிக்கு வந்த இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் ஒன்று, இரவு சூழ்ந்துவிட்டதால், மீட்புப் பணியை தற்போது மேற்கொள்ள முடியாது என திரும்பியுள்ளது. இருப்பினும், காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை வீரர்கள் இணைந்து, தீயில் சிக்கிய 8 பேரை இரவுக்குள் மீட்டனர். அதன்பிறகு அதிகாலையில் மீட்புப்பணியை அவர்கள் தொடங்கியபோது, தேனியில் இருந்து பயிற்சிக் காவலர்கள் 100 பேரும், கமாண்டோ படை வீரர்கள் 10 பேரும் அங்குவந்தனர். இதையடுத்து, மீட்புப்பணி இன்னும் வேகம் பிடித்ததால், காலை 6 மணிக்குள் 16 பேர் மீட்கப்பட்டனர்.

காலை 8 மணிக்குள் 27 பேர் மீட்கப்பட்ட நிலையில், அதுவரை புகையுடன், பனியும் கொழுக்குமலை பகுதியைச் சூழ்ந்து இருந்ததால், அங்கு மீட்புப் பணியில் ஈடுபட முடியாமல் இருந்த விமானப் படை ஹெலிகாப்டர்கள், காலையில் 9 மணிக்குப் பிறகு களமிறக்கப்பட்டன. இருப்பினும் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் சடலங்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. டிரக்கிங் சென்றவர்கள் யாரும் கொழுக்குமலை பகுதியில் இல்லை என உறுதியான பிறகு, மீட்புப்பணிகள் நிறைவுற்றதாக தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

மேலும் செய்திகளுக்கு  தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment