கிரிக்கெட் சங்க ஊழல்..! ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

கிரிக்கெட் சங்க ஊழலில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி நாளை அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி மூத்த தலைவரான 86 வயது பரூக் அப்துல்லா, ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஆவார்.

இவர் ஜம்மு – காஷ்மீர் கிரிக்கெட் சங்க (JKCA) நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பிலிருந்த போது பல்வேறு நிதி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. 2001ல் இருந்து 2012 க்கு இடையில், ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ரூ.112 கோடி வழங்கியது, இதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி!

இந்த நிதி முதலில் பல தனியார் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் பரூக் அப்துலா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களிடையே பிரித்துகொள்ளப்பட்டது என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்துள்ள பணமோசடி வழக்கில், பரூக் அப்துல்லாவிற்கு கடந்த ஜனவரி 11ல் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அப்போது பரூக் அப்துல்லா ஆஜராகவில்லை. இதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை ஆஜராக இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

Leave a Comment