“பள்ளியின் மீதே எங்களுக்கு சந்தேகம்” – உயிரிழந்த கரூர் மாணவியின் தாயார் அளித்த பரபரப்பு தகவல்!

கரூர்:பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக,அவர் படித்த தனியார் பள்ளியின் மீதுதான் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த மாணவியின் தாயார் கூறியுள்ளார்.

கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி இரண்டு தினங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அக்கடிதத்தில்,”பாலியல் வன்கொடுமையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நானாகத்தான் இருக்க வேண்டும். எனக்கு யார் இந்த கொடுமையை செய்தார்கள் என்று வெளியே சொல்ல பயமாக உள்ளது’,என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து,கரூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், பள்ளியின் மீதே தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக மாணவியின் தாயார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:”எனது மகள் இறந்த பிறகு பள்ளி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றோம்.ஆனால், காவலர்கள் சிலர் எங்களது உறவினர்களை தாக்கினார்கள்.மேலும்,புகார் அளிக்கச் சென்ற என்னையும்,உறவினர்கள் 3 பேரையும் மறுநாள் விடியற்காலை 5 மணி வரை காவல்நிலையத்திலேயே உட்கார வைத்து விட்டனர்.அதன் பின்னரே,மருத்துவமனைக்கு நாங்கள் சென்றோம்.

இதனைத் தொடர்ந்து,காலை 10 மணிக்கெல்லாம் பிரேத பரிசோதனை முடிந்த பிறகும் பிள்ளையின் முகத்தை எங்களை பார்க்க விடாமல் வேகமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.அதன்பிறகு,காரியங்களை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த பிறகுதான் கெமிஸ்ட்ரி(வேதியியல்) பேப்பர் எல்லாம் கிழித்துப் போட்டு இருந்தது தெரிய வந்தது.இதன்காரணமாக, பள்ளி மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எங்கள் பிள்ளை ஒருநாள் கூட பள்ளிக்கு செல்லாமல் இருக்கமாட்டாள். ஆனால்,கெமிஸ்ட்ரி பாடம் வருகின்ற நாட்களில் மட்டும் பள்ளிக்கு செல்ல மிகவும் பயந்தாள்.என்ன காரணம்? என்று கேட்டபோது,ஆசிரியர் ஒருவர் தகாத வார்த்தையை அதிகமாக பயன்படுத்தி மாணவர்களை திட்டுவதாகவும்,பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடக்கும்போது எல்லா பெற்றோரும் வந்து கேட்கும் நேரத்தில் நீங்கள் வந்து கேட்டால் சரியாக இருக்கும் எனக் கூறினாள்.குறிப்பாக,என்னை தகாத வார்த்தைகளால் ஏதும் பேசினால் நான் எதிர்த்துப் பேசி விடுவேன் அம்மா என்று தைரியமாகத்தான் கூறினாள்.எனவே,பள்ளியின் மீதே எங்களுக்கு சந்தேகம் உள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,மாணவி தற்கொலை புகாரில் அலட்சியமாக இருந்ததாக காவல் ஆய்வாளர் கண்ணதாசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மேலும், மாணவிக்கு பாலியல்  தொல்லை அளித்து,அவரது இறப்பிற்கு காரணமான குற்றவாளிகளை கண்டறிய சைபர்கிரைம் போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால்,மாணவி பயன்படுத்திய செல்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.