பரபரப்பு…தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகளால் சர்ச்சை!

சென்னை:குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் சர்ச்சையானதை அடுத்து,உரிய புகார் அளிக்கும் பட்சத்தில்,வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து, தமிழக அரசின் உத்தரவின்படி விசாரணை நடத்தப்படும் என சென்னை காவல்துறை தகவல்.

நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு,நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,தமிழகத்திலும் இன்று  அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்,தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் சென்னை ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாகவும்,மேலும்,தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த நிலையில்,இந்த விவகாரம் தொடர்பாக உரிய புகார் அளிக்கும் பட்சத்தில்,வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து,தமிழக அரசின் உத்தரவின்படி விசாரணை நடத்தப்படும் என சென்னை காவல்துறை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.