தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் உங்கள் வீட்டு பிள்ளைதான் – ராகுல் காந்தி

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி தமிழை மத்திய அரசு அவமதிப்பதை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.

மூன்று நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதன்படி நேற்று முதல் கட்டமாக கோவை மற்றும் திருப்பூரில் தனது பரப்புரையை மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி, நான் உங்களில் ஒருவன், நான் தமிழன் இல்லை, ஆனால் தமிழை மதிக்கிறேன். தமிழை மத்திய அரசு அவமதிப்பதை ஏற்க முடியாது. டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழக கலாச்சாரத்தை மதிக்கவில்லை. எனது கருத்துகளைக் கூற நான் இங்கு வரவில்லை, உங்கள் பிரச்சனைகளை தெரிந்து கொள்ளவே வந்துள்ளேன்.

மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும். மத்தியில் ஆட்சி செய்பவர்கள் தமிழில் பேசி ஏமாற்றலாம் என நினைக்கிறார்கள். ஜிஎஸ்டி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தமிழக மக்களை பாதிப்படைய செய்துள்ளது. என் பாட்டியான இந்திரா காந்தி மீதும் தந்தை ராஜிவ் காந்தி மீதும் தமிழக மக்கள் அன்பு காட்டினர். தமிழ் மக்களுடன் எனக்கு அரசியல் உறவல்ல, குடும்ப உறவு உள்ளது. தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் உங்கள் வீட்டு பிள்ளைதான் என்று ராகுல் காந்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்