இபிஎஸ் உடன் ஓபிஎஸ் சேர்ந்தாலும் நாங்கள் சேர மாட்டோம்.! டி.டி.வி.தினகரன் பரபரப்பு அறிவிப்பு.!   

அமமுக தலைவர் டிடிவி தினகரன் இன்று மதுரையில் நடைபெற்ற அமமுக கட்சி நிகழ்வுகளில் கலந்துகொன்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்து, தமிழக அரசியல் நிலவரம், ஒ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார்.

தமிழகத்தில் ஒரு பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவராக முடியவில்லை என்றால் எங்கே இருக்கிறது உங்கள் சமூக நீதி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் விமர்சித்து இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமமுக தலைவர் தினகரன்,  தமிழகத்தில் எல்லோரும் சமமானவர்கள் என்று நிலை தான்உள்ளது. பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் தீண்டாமை என்பது இல்லை. ஜாதி பாகுபாடு இல்லை. தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. இதில் தனிநபர் செய்யும் செயல்களுக்கு ஆளுநர் மொத்த மாநிலத்தையும் குறை கூறுவது தவறானது என கூறினார்.

பாஜக உடன் அமமுக கூட்டணியில் சேருமா என்ற கேள்விக்கு, தற்போது அரசியல் கூட்டணி யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் எப்போதுமே ஜாதி மத அடிப்படையில் வாக்களிக்க மாட்டார்கள். அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து தான் வாக்களிப்பார்கள். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்று டிடிவி.தினகரன் கூறினார்.

ஓபிஎஸ் உடன் எவ்வாறு மீண்டும் சேர்ந்தீர்கள் என்று கேட்டதற்கு, ஓ.பன்னீர்செல்வம் எனது பழைய நண்பர். அவரது முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவர் எனது நண்பர் என்பதால் மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்தோம். மற்றபடி ஓ.பன்னீர்செல்வம், அவரது கட்சி சார்பாக தனித்து செயல்படுகிறார். நாங்களும் தனித்து செயல்படுகிறோம். நாங்கள் ஒன்றிணைந்து ஆலோசனை செய்வோம். மற்றபடி எங்களது செயல்பாடுகள் தனித்தனியே என டிடிவி.தினகரன் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி உடன் அமமுக இணைந்து செயல்படுமா என்ற கேள்விக்கு, அமமுக தொண்டர்கள், 90 சதவீத நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியிடம் சேர்ந்து பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. ஒருவேளை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உடன் சேர்ந்து பணியாற்ற விரும்பினாலும், நாங்கள் சேர மாட்டோம். ஒரு நண்பராக ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் குணம் எனக்கு தெரியும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் சுபாவம் என்னவென்றே எனக்கு தெரியாது. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

காவிரி விவகாரம் குறித்து டிடிவி தினகரன் பேசுகையில், கர்நாடகா எப்போதுமே வன்முறை பாதையை தான் கையாண்டு வருகிறது. ஆனால் தமிழகம் தங்களது உரிமைக்காக நீதிமன்றம் தான் எப்போதும் செல்லும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று வாரியம், உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் கர்நாடகா அரசு செயல்பாடு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.