மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது… தேர்தல் ஆணையம்!

MDMK : வைகோவின் மதிமுகவிற்கு பம்பர சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டம்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் விறுவிறுப்பாக வெட்பமானு தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். இந்த சூழலில், பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக பதில் அளித்துள்ளது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே, மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இன்று பிற்பகல் அதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்