இமயமலையில் விரைவில் நிலநடுக்கம்.? தயாராக இருங்கள்.. நிபுணர்கள் எச்சரிக்கை.!

நேபாளத்தில் 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.32 மணியளவில் காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், லாமிடாண்டா பகுதியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது.

இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுக்குநூறாகியுள்ளன. இதனால் இடிபாடுகளில் சிக்கி 132 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக 128 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு 132 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் காணாமல் போயுள்ள நிலையில் மீட்புபடையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதற்கிடையில் நேபாளத்தின் மத்திய பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் எந்த நேரத்திலும் ஆபத்தை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று நில அதிர்வு நிபுணர் எச்சரித்துள்ளார்.

வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜியில் பணிபுரிந்த நில அதிர்வு நிபுணரான அஜய் பால், நேபாளத்தின் டோட்டி மாவட்டத்திற்கு அருகில் உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அக்டோபர் 3ம் தேதி நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களும் அதே பகுதியைச் சுற்றியே ஏற்பட்டதாகவும் கூறினார்.

நேபாளத்தின் நில அதிர்வு மண்டலம் தற்போது செயலில் உள்ளது. எனவே எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அஜய் பால் எச்சரித்துள்ளார். மேலும் இமயமலைப் பகுதியை எப்போது வேண்டுமானாலும் பெரும் பூகம்பம் தாக்கும் என்று பல விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இமயமலை ஆனது சுமார் 40 முதல் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய டெக்டோனிக் தட்டு இந்தியப் பெருங்கடலில் இருந்து வடக்கே தள்ளப்பட்டு யூரேசியத் தட்டுடன் மோதி உருவானது. இந்திய டெக்டோனிக் தட்டு வடக்கு நோக்கி நகர்ந்து யூரேசிய தட்டுடன் மோதுவதால், இமயமலைக்கு அடியில் அழுத்தம் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதனால் எட்டுக்கு மேல் ரிக்டர் அளவு கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இமயமலையில் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இருந்தும் இந்த பெரிய நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பது சரியாக தெரியவில்லை.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.