#DoandDie: செய்து முடித்துவிட்டு தான் சாக வேண்டும் – அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் உரை!

அரசு ஊழியர்கள் இல்லையென்றால் அரசாங்கம் இல்லை என அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை.

சென்னை மதவாரத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் 14-ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம், அவர்கள் இல்லையென்றால் அரசாங்கம் இல்லை. அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

திமுக ஆட்சி அமைத்த போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு துணையாக நிற்கும். ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் அரசு ஊழியர்களுக்காக ஏரளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அரசு பணியாளர்கள், பதவி உயர்வு பெறும் அரசு ஊழியர்கள் அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு படிப்படியாக நிச்சயமாக செயல்படுத்தும். கடும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும் அகலவிலைப்படி உயர்வை அமல்படுத்தியுள்ளோம். ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும் என உறுதி அளித்தார்.

நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன், அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம். நான் அதிகம் பேசமாட்டேன், செயலில் காட்டுவேன். செய்து முடித்துவிட்டு தான் சாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே கடமையாற்றி வருகிறேன்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. do or die, என்னை பொறுத்தளவில் அதை do and die என்று எடுத்துக்கொள்வேன். செய்துவிட்டு செத்துமடி என்று சொல்வேன் என தெரிவித்தார். அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை நிதி வழங்கியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும் குறிப்பிட்டார்.

ஜி.எஸ்.டி. முதல் வெள்ள நிவாரண நிதிவரை மத்திய அரசு சரியாக வழங்குவதில்லை என்றும் கொத்தடிமைகளை போல் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் மாநில அரசு உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசின் நிதிநிலை சரியானதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்