திமுக எம்எல்ஏ மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! FIR-ல் வெளியான தகவல்கள்

திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகியுள்ளது. உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவர் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை, குடும்ப சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வீட்டு வேலை செய்ய 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர். திருவான்மியூரில் வசித்து வந்த ஆண்ட்ரோவும் அவரது மனைவி மெர்லினாவும் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

குறிப்பாக அதிகளவில் வேலை வாங்கியதுடன் அவரது உடலின் பல்வேறு பகுதிகளில் காயம் மற்றும் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. வேலை பிடிக்கவில்லை வீட்டுக்கு போகிறேன் என கிளம்பிய அப்பெண்ணை தடுத்து நிறுத்தி கட்டாயப்படுத்தி தங்க வைத்து தாக்கி காயப்படுத்தியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், பொங்கலையொட்டி சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட அப்பெண், பெற்றோரிடம் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளார். காயங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து, மருத்துவமனை சார்பில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீஸார் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான இருவர் மீதும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்துள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் குடும்பத்துடன் மும்பை சென்றபோது குழந்தைக்கு உணவு தயாரிப்பதில் தாமதமானதால் மெர்லினா ஊர் திரும்பிய பின்பு என்னை துன்புறுத்தி திட்டினார். இது அவர்களது குழந்தை முன்பே நடந்தது. மேலும், அவரது கணவரும் வேகமாக வேலை செய்ய வேண்டும் எனக்கூறி துடைப்பத்தை கொண்டு அடித்தார்.

பற்களை பிடுங்கிய விவகாரம்: காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து

துணி துவைத்து கொடுக்கும் போது சிறு கறை இருந்தாலும் அடித்ததோடு எனக்கு சமைக்கவும், துவைக்கவும் தெரியாதென்று சொன்னால் 10 பச்சை மிளகாயை கடித்து சாப்பிட சொல்லி துன்புறுத்தினார்கள். அடிக்கடி ஜாதி பெயரை சொல்லி அடித்து துன்புறுத்தினார்கள். பொங்கல் விடுமுறைக்காக கடந்த 16ஆம் தேதி என் அம்மாவிடம் சென்றபோது நடந்த அனைத்தையும் கூறினேன். அவர் உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.