#BREAKING: நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை..!

நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு  விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு, நன்கொடை அல்ல, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் காட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், தனி நீதிபதி விதித்த தீர்ப்பை எதிர்த்தும், தான் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கில் விஜய் தரப்பில் இன்று முன்வைக்கப்பட்ட வாதத்தில், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தவேண்டும் என்கிற உத்தரவை எதிர்க்கவில்லை, அதை மதிக்கிறோம்.  ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம்.

ஆனால் தனி நீதிபதி கூறிய கருத்துக்களையும், அவர் விதித்த ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தையும் ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு. விஜயை விமர்சித்த நீதிபதியின் கருத்துகளை நீக்குவது பற்றி 4 வாரங்களுக்கு பின் விசாரணை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு 2012ஆம் ஆண்டு 20 சதவீதம் நுழைவு வரி செலுத்தி அந்த வாகனத்தைப் பதிவு செய்து பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan