நெடுஞ்செழியன் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழ்மொழி அறிஞர் நெடுஞ்செழியன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல்.

தமிழறிஞரும், திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் வயது (79) உடல்நல குறைவு காரணமாக சென்னையில் இன்று அதிகாலை காலமானார். உடல்நல குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

நெடுஞ்செழியன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவரகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நெடுஞ்செழியன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் – முனைவர் நெடுஞ்செழியன் அவர்கள் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவருக்குக் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை நான் வழங்கினேன். சக்கர நாற்காலியில் வந்து அவர் அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்கள். அப்போது உரையாற்றிய நான், 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறும் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களின் அறிவுத் திறத்தைச் சொல்வதாக இருந்தால் பல மணி நேரம் ஆகும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் இனமானப் பேராசிரியர் அவர்களும் இன்று இருந்திருந்தால் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கு விருது வழங்கும் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

தமிழுக்கும் தமிழினத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் தொண்டாற்றுவதற்காகத் தனது வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டவர்தான் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள். பல்வேறு நூல்களைப் படைத்தவர். தந்தை பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் பற்றியும் தொடர்ந்து எழுதி வருபவர் பேராசிரியர்.எழுதுபவர் மட்டுமல்ல இன உரிமைப் போராளி அவர். அவருக்கு இந்த விருது தரப்பட்டது பெருமைக்குரியது ஆகும் என்று நான் குறிப்பிட்டேன்.

அத்தகைய படைப்பாளியாகவும், போராளியாகவும் இருந்தவரைத்தான் இழந்துள்ளோம். அவரது அறிவு நூல்கள் தமிழ்ச் சமுதாயத்தை எந்நாளும் உணர்ச்சியூட்ட உதவவே செய்யும். தமிழ் மரபும் பெருமையும் காத்திடும் தமிழ் மான மறவர்’ என்று இனமானப் பேராசிரியர் அன்பழகனார் அவர்களால் போற்றப்பட்ட பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்களின் புகழ் வாழ்க! அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment