#Breaking:நிலம் ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!

சென்னை:கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோயில் நிலங்களை மீட்க அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.அதன்படி,ஏராளமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து,கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்து,குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில்,கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோயில் நிலங்களுக்கு வாடகை தராதவர்கள், வாடகை ஒப்பந்தம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும்,இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக,இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

“அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் சட்டப்படியான உரிமை இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது ஆணையரின் எழுத்து மூலமான புகாரின் (Complaint) பேரில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டப்பிரிவு 79 (B) (3)யில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால்,ஒவ்வொரு நிகழ்விலும் ஆணையர் மட்டுமே புகார் செய்வது என்பது இயலாது என்பதால் 1973 ஆம் ஆண்டைய இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி குற்ற நிகழ்வு குறித்து அறிந்த எந்தவொரு நபரும் ஆக்கிரமிப்பாளர் மீது எழுத்துமூலமான புகாரினை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிக்கு அளிக்கும் வகையில் சட்டப்பிரிவு 79 (B) (3)ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

எனவே,அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுமின்றியும்,உரிய வாடகையினை செலுத்தாமலும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய காவல் நிலையத்தில் முறையாக புகார் மனு அளித்திட சம்பந்தப்பட்ட அறநிறுவனங்களின் அறங்காவலர்கள் அல்லது தக்கார் அல்லது செயல் அலுவலர்களை அறிவுறுத்தப்படுகிறது.

இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் படி குற்ற நிகழ்வு குறித்து அறிந்த எந்த ஒரு நபரும் புகார் மனு அளித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அறநிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை சட்டப்படியான உரிமையின்றி அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து திருக்கோயில் நிர்வாகிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு விரைந்து ஆக்கிரமிப்புதாரர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஆக்கிரமிப்புதாரர்களுக்கெதிராக தனிநபர்களால் காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகார் மனு மீதான விசாரணைக்கு தேவையான ஆவணங்களையும், முழுமையான ஒத்துழைப்பையும் காவல்துறைக்கு வழங்கிட வேண்டுமென திருக்கோயில் நிர்வாகிகளை அறிவுறுத்தப்படுகிறது.

இதன் நகலை அனைத்து திருக்கோயில் நிர்வாகிகளுக்கும் அனுப்பிட இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்களை அறிவுறுத்தப்படுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.