#Breaking: தடுப்பூசு போடுவதற்கான முன்பதிவு செய்யும் இணையதளத்தில் சிக்கல்!

இந்தியாவில் 18-44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அதற்கான வலைத்தளத்தில் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தற்பொழுது 45 வயதிற்கு மேலானவர்களுக்கு கோவிஷில்ட், கோவாக்ஸின் என 2 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது.

இதனைத்தொடர்ந்து, மே 1-ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்காக இன்று முதல் www.cowin.gov.in/home என்ற வலைத்தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 4 மணி முதல் மக்கள் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வலைத்தளத்தில் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றர். அந்தவகையில், பலருக்கும் OTP வரவில்லை என்றும், அவ்வாறே OTP வந்தாலும் 18-44 வயதினருக்கான ஸ்லாட் (slot) என்பது வரவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சில இடங்களில் வலைத்தளம் முழுவதுமாக முடங்கியதாகவும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் விரைவில் சரிசெய்ய வேண்டும் என்றும், 18-44 வயதினருக்கான ஸ்லாட்-ஐயும், தடுப்பூசி இல்லை என்று வருவதையும் சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.