தஞ்சை கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிய வழக்கு : தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்

  • தொல்லியல் துறையின் முறையான அனுமதி பெறவில்லை எனவே  குடமுழுக்கு  நடத்த தடை விதிக்கவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் குடமுழுக்கு தமிழில்  நடத்த வேண்டும் என  ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.ஆனால் ஆண்டாண்டு காலமாக ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடத்த வேண்டும்  என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.உயர்நீதிமன்ற மதுரை  கிளையில்,குடமுழுக்கு தொடர்பாக ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன், பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் மனுதாக்கல் செய்து இருந்தனர்.அந்த மனுக்களில், தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல்  நடத்த உள்ளனர்.புராதன தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த முறையான அனுமதி பெறவில்லை.குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மீதான விசாரணையில் ,தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்தது.குடமுழுக்கு என்ன மொழிகளில் செய்யப்படும் என்பதை இன்று பிரமாணபத்திரமாக தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு  உத்தரவு பிறப்பித்து வழக்கை இன்று ஒத்திவைத்தது.இந்நிலையில் இன்று அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.அதில், ஆகம விதிப்படியும்,தமிழிலும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் நடைபெறும் குடமுழுக்கு அன்று கருவறை முதல் கோபுரம் வரை சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கும் முக்கியத்துவம் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.