எச்சரிக்கையுடன் இருங்கள்.. மலேசியாவில் “பத்து மடங்கு வேகமாக பரவும்” கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

மலேசியாவில் பத்து மடங்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கத்தில் உலகநாடுகள் தீவிரம் காட்டிவருகிறது.

இந்தநிலையில், மலேசியாவில் கொரோனாவைக் காட்டிலும், பத்து மடங்கு வேகமாகப் பரவும் தன்மையுடைய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக மலேசிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைமை ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். அதற்கு “D614G” என பெயரிட்டுள்ளனர்.

அந்த வைரஸ் தொற்று, தமிழகம், சிவகங்கையை சேர்ந்த நபருக்கு இந்த தொற்று உறுதியானதாகவும், மக்கள் அனைவரும் கூடுதல் கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்கவேண்டுமென அறிவுறுத்தினார். மேலும், இந்த வகையான கொரோனா தொற்று, எளிதாகவும், பத்து மடங்கு வேகமாக பரவும் என தெரிவித்தார்.

மேலும், மலேசியாவின் உலுதிராம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் இந்த D614G கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,200ஆக அதிகரித்துள்ளது.

அதில் 8,859 பேர் குணமடைந்து வீடுதிரும்பிய நிலையில், 125 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 216 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.