கொரோனா மூன்றாவது அலை.., அக்டோபரில் உச்சத்தை தொடும் – தேசிய பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனதின் குழு எச்சரிக்கை.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கமே இன்னும் முழுமையாக முடியாத நிலையில், கொரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு பற்றி பலரும் பேச ஆரம்பித்து விட்டனர். கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் சிலா் எச்சரித்துள்ளனா்.

ஆகவே, மருத்துவமனைகளில் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுகளை வலுப்படுத்த தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மூன்றாவது அலை உச்சம் தொட்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடும் என தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள சமீபத்திய அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் குழுவினர், கொரோனா தடுப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வருகிறது.

தற்போதைய சூழலில் அனைத்து மாநிலங்களும் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்ட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய நிபுணர் குழு, கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் பாதியளவேனும் மூன்றாம் அலையில் இருக்க கூடும் என கணித்துள்ளது.

எனவே, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறிய நிபுணர் குழு, மருத்துவமனைகளில் போதிய படுக்ககைகள், ஆக்சிஜன் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்