கொரோனா நிவாரணத்தொகை கால அவகாசம் நீட்டிப்பு..!

கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் வாங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சர் பதவியேற்ற திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற அன்றைய தினமே குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார்.

இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது. முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது.  இரண்டாவது தவணையாக ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது.

பின்னர் கொரோனாவின் தாக்கம் குறைய குறைய ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரணத்தொகை மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் பெறாதவர்கள் ஜூலை 31 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு காரணமாகவோ அல்லது வேறு காரணங்களால் ஜூலை 31 ஆம் தேதிக்குள் நிவாரணத்தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் பெற முடியாதவர்கள் ஜூன் 15, 2021 தேதியில் தகுதியுடன் கூடிய குடும்ப அட்டை தாரர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் அவரவர்களுக்குரிய நியாயவிலை கடைகளின் மூலம் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து அனுமதி பெற்ற பிறகு, நியாய விலை கடைகளில் நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.