2026ஐ குறிவைக்கும் காங்கிரஸ்.? கேரளாவில் இறங்கி அடிக்கும் ராகுல்.!

Kerala Election 2024 : கேரளாவில் கடந்த முறை போல இந்த முறையும் மக்களவை தேர்தலில் தடம்பதிக்க காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது.

நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வேளைகளில் அரசியல் கட்சியினர் வெகு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வார வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ஆம் தேதியன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அடுத்து வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

I.N.D.I.A கூட்டணி :

முந்தைய தேர்தல்களை போல அல்லாமல் இந்த முறை தேர்தலை உலக நாடுகளே உற்றுநோக்கும் வண்ணம் வெகு பரபரப்பான திருப்பங்களோடு இந்திய மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 2014 மற்றும் 2019 என இரு தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்துள்ளது பாஜக. அதனை எதிர்க்க, காங்கிரஸ், I.N.D.I.A எனும் மெகா கூட்டணியை அமைத்துள்ளது.

எதிரெதிர் துருவங்கள் :

இந்த I.N.D.I.A கூட்டணியில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்டிரிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ் தாக்கரே) உள்ளிட்ட சுமார் 25 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் – திரிணாமுல் எதிரெதிர் முனையில் போட்டியிடுகின்றன. ஆனால் வெளியில் இந்தியா கூட்டணியில் ஒன்றிணைத்துள்ளன. அதே போல கூட்டணியில் ஒன்றாக இருக்கும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகள் , கேரளாவில் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இப்படியாக மாநில வாரியாக கூட்டணி என்று இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பாஜகவை எதிர்க்க I.N.D.I.A என்ற கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளன.

கேரளா தேர்தல்கள் :

கேரளாவில், மொத்தமுள்ள 20 மக்களவை தொகுதிகளில், கடந்த 2 முறையும் காங்கிரஸ் கட்சிதான் அதிக தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. கடந்த 2014இல் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளிலும், கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளிலும் (காங்கிரஸ் மட்டும் 15) வெற்றி பெற்று இருந்தன. இருந்தும் , 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சியாகவே தொடர்ந்து வருகிறது.

கேரள சட்டமன்ற தேர்தலில் 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் (LDF) அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றன. தமிழகத்தை போலவே 2026இல் கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் திட்டம் :

இதனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி தற்போது தீவிரமாக வேலை செய்து வருகிறது. இந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மட்டுமல்லாது, 2026 சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் மீண்டும் கேரளாவிலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.

காங்கிரஸ் நிலைப்பாடு…

முன்னதாக, கடந்த 2019 தேர்தலில் கேரள வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா மனைவி அன்னி ராஜா போட்டியிடுகிறார். I.N.D.I.A கூட்டணியில் ஒன்றாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி என்று முன்னர், கேரள கம்யூனிஸ்ட் கட்சியினரை அதிகமாக விமர்சிக்காத ராகுல் காந்தி, இந்த முறை கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.

ராகுல் காந்தி கேரளாவில் பிரச்சாரம் செய்கையில், நான் மோடியை முன்னிறுத்தி விமர்சித்து வரும் வேளையில் , பினராயி விஜயன் என்னை விமர்சனம் செய்கிறார். அமலாக்கத்துறையினரிடம் நான் 55 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். இரண்டு முதலமைச்சர்கள் ஜெயிலில் உள்ளனர். ஆனால் இதுபோன்ற எந்த சம்பவமும் பினராயி விஜயனுக்கு நடக்கவில்லை என விமர்சனம் செய்தார்.

பினராயி விஜயன் பதிலடி :

அதற்கு பினராயி விஜயன் பிரச்சாரத்தில் பேசுகையில், உங்கள் பாட்டி இந்திராகாந்தி எங்களை ஒன்றரை வருடத்திற்கும் மேலாக  ஜெயிலில் வைத்து இருந்தார். ஜெயில் விசாரணை என்பதை போதுமான அளவில் நாங்கள் பார்த்துவிட்டோம். அதனை வைத்து எங்களை மிரட்ட முடியாது என விமர்சனம் செய்தார்.

தேசிய அரசியல் :

இப்படியாக I.N.D.I.A கூட்டணியில் ஒன்றாக இருக்கும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரள அரசியலில் நேருக்கு நேர் மோதிக்கொள்வது தேசிய அரசியலில் பாஜகவுக்கு சாதகமான பாதையை வகுத்து விடுமோ என்ற சிறு சலசலப்பும் கூட்டணி கட்சியினர் மத்தியில் ஐயம் எழுந்துள்ளது. எது எப்படி இருந்தாலும், மக்கள் தீர்ப்பை காண ஜூன் 4 வரையில் காத்திருக்கத்தான் வேண்டும்.