வெற்றி பெறுவோம் என நமச்சிவாயத்துக்கே நம்பிக்கை இல்லை.. காங்கிரஸ் வேட்பாளர் அதிரடி.!

Election2024 : புதுச்சேரியில் வெற்றி பெறுவோம் என பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கே நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியியலிங்கம் கூறியுள்ளார்.

புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே 2019இல் வெற்றி பெற்ற வெ.வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். புதுச்சேரி மண்ணாடிபட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், புதுச்சேரி அமைச்சராகவும் உள்ள நமச்சிவாயம் தனது அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்யாமல் மக்களவைக்கு போட்டியிடுகிறார்.

இது குறித்து காங்கிரஸ் வேட்பாளரும், கடந்த முறை காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவருமான வெ.வைத்தியலிங்கம் விமர்சித்து உள்ளார் . அவர் தனியார் செய்தி நிறுவனம் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில், உண்மையாகவே நீங்கள் (பாஜக) தான் வெற்றி பெறுவீர்கள் என்றால் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும்.

அமைச்சர் நமச்சிவாயத்திற்கு அவர் மேலேயே நம்பிக்கை இல்லை. அதனால் தான் நமச்சிவாயம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கிறார். அவர் ராஜினாமா செய்தால் மக்களவை தேர்தலோடு, இடைத்தேர்தலும் ஒரே செலவாக இருந்திருக்கும். அதனை விடுத்து, ராஜினாமா செய்யாமல் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.

புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம், புதுச்சேரி மாநில அரசு சட்டமன்றத்தில் புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்த்து அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், அதனை அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பவே இல்லை. அவர்கள் அனுப்பினால் தான் நாடாளுமன்ற உறுப்பினராக அதனை நான் மத்திய அரசிடம் கேட்க முடியும். மாநில அரசு கோராமல் நான் எப்படி மத்திய அரசை கேட்க முடியும் என தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.