இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்.. ஜனநாயக கடமையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார்.

நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி, தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 6 கோடியே 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

அந்தவகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது வாக்கை செலுத்தினார். சென்னை SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, நான் எனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். அதேபோல் வாக்கு உரிமை பெற்றிருக்க கூடிய அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வலியுறுத்திய முதல்வர், இந்தியா கூட்டணிக்கு நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.

இதையடுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முதல்வர்பதிவிட்டுள்ளார். அதில், நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன். அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள். நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்