தீபாவளிக்கு பட்டாசு விற்க, வெடிக்க தடை – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

இந்தாண்டு தீபாவளியையொட்டி டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், வெடிக்கவும் தடை விதித்தது மாநில அரசு.

இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த மூன்று வருடங்களில் தீபாவளியின் போது டெல்லியில் காற்று மாசு ஏற்படும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் அனைத்து வகையான பட்டாசுகளையும் சேமிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் முழு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மக்களின் உயிர்களை காப்பாற்றவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காற்று மாசு காரணமாக தொடர்ந்து டெல்லியில் நான்கு ஆண்டாக பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வியாபாரிகள் பட்டாசுகளை பதுக்கி வைத்த பிறகு மாசுபாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தாமதமாக முழு தடை விதிக்கப்பட்டது. இது வியாபாரிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியது.

இந்த முறை முன்கூட்டியே தடை விதிக்கப்பட்டதால் முழு தடையை கருத்தில் கொண்டு, எந்த வித சேமிப்பையும் செய்ய வேண்டாம் என்று அனைத்து வியாபாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்