#Breaking:சிவசங்கர் பாபா செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்..!

சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

ஆனால், சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர்,இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து,சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவர,அவர் வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லாமல் இருக்க,அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பினர்.மேலும்,தமிழ்நாடு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக உத்தரகண்ட் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து,டேராடூன் மருத்துவமனையில் இருந்த சிவசங்கர் பாபா சிபிசிஐடி வருவதை அறிந்து மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.பின்னர், நேற்றுகாலை சிவசங்கர் பாபா டெல்லி காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா மொட்டை அடித்து அடையாளத்தை மாற்றியிருந்தார்.இதனையடுத்து,அவரை டெல்லி சாகேத் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தி தமிழக்திற்கு அழைத்துச் செல்ல சிபிசிஐடி போலீசார் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.இதனால்,சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து செல்ல டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதன்காரணமாக,சிவசங்கர் பாபாவை இரவோடு இரவாக,விமானம் மூலம் சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.மேலும்,வரும் 19 ஆம் தேதியன்று அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில்,சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,நீதிமன்ற காவலில் சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் வைக்க உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.