செத்தால்தான் சாதிச் சான்றிதழ் கிடைக்குமா? – மநீம

சாதி சான்றிதழ் கிடைக்காததால் நீதிமன்ற வளாகத்தில் வேல்முருகன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு மநீம கண்டனம் தெரிவித்துள்ளது. 

காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராடியுள்ளார். மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழுக்காக பலமுறை அலைந்தும் பயனில்லை.

மனம் வெறுத்துப்போன வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்க்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வேல்முருகனை இழந்த அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். வேல்முருகனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம், குழந்தைகளுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.  இதுபோல ஏற்கெனவே பலரும் சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

பழங்குடிகளுக்கு சாதிச் சான்றிதழ் கொடுக்கும் அதிகாரம் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு இருந்தாலும், அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, சாதிச் சான்றிதழ்கள் வழங்காமல் காலதாமதம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இதேபோல, வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.

இனியும் தற்கொலைகள் தொடராமல் இருக்க, சாதிச் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, குறிப்பிட்ட காலத்தில் சான்றிதழ் வழங்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பது, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது.

அனைவருக்கும் சமநீதி வழங்குவதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என்று கூறிக் கொள்ளும் திமுக அரசும், தமிழக முதல்வரும் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment