அர்ச்சகர்களுக்கு புத்தாடை, பணியாளருக்கு சீருடை வழங்க- இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு..!

திருக்கோயில் தைத்திருநாளில் பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக்கோரிக்கையின் போது, தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் ரூ.10 கோடி செலவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு  வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

மேற்படி சட்டப்பேரவை அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களில் ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட சிப்பந்திகள் பணிப்பட்டியலின்படி பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு இரண்டு ஜோடி புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு இரண்டு ஜோடி சீருடைகளை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தரமான சீருடைகளை அந்தந்த திருக்கோயில் நிதிமூலம் கொள்முதல் செய்து வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அர்ச்சகர்/பட்டாச்சாரியார்/பூசாரிகளுக்கு 11/2 இன்ச் அகலத்தில் மயில்கண் பார்டர் பருத்தி வேஷ்டியும், பெண் பூசாரி/ பணியாளர்களுக்கு (Crape Material) அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவை, ஆண் பணியாளர்களுக்கு ப்ரௌன்(Brown) நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணி கொள்முதல் செய்து அளிக்கப்பட வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை கொள்முதல் செய்து வழங்கிடல் வேண்டும்.

நிதி வசதி இல்லாத திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள்/ பூசாரிகள் மற்றுப் பணியமளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கிட அவரவர் சரகத்தில் உள்ள நிதிவசதி உள்ள திருக்கோயில்கள் மூலம் நிதி பெற்று சீருடை வழங்க உரிய நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்படுகிறது.

இப்பணியினை 31.12.2021-க்குள் முடித்து அறிக்கை அனுப்பிட அனைத்து மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்த சீருடை மற்றும் புத்தாடைகளை தமிழர் திருநாளாம் தைத்திங்கள் முதல் நாளிலிருந்து பணிக்கு வரும் போது தவறாமல் அணிந்து வர அனைத்து பணியாளர்களுக்கும் அறியுறுத்தவும் அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், ஆண் பணியாளர்களுக்கான ப்ரௌன் நிற கால் சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டைக்காண மாதிரி இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இந்த செலவினத்திற்கு வரவு செயவு திட்ட மதிப்பீடுகளில் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan