அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறப்பு ! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளை அறிவித்தது.

தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,  மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.குறிப்பாக அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகள், விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கான நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியது.

திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ்கள் 50% இருக்கை வசதிகளுடன் இயங்கலாம் என   தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு  வெளியிட்டுள்ளது.அதன்படி , ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும். மாஸ்க் அணிந்த படியே அனைவரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க  வேண்டும் .திரையரங்கு உள்ளே  நொறுக்குத் தீனி வழங்க தடை விதிக்கப்படுகிறது .ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும் கிருமி நாசினி  கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.