#BREAKING: பிப்.1 முதல் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறப்பு – தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் பிப். 1 ஆம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என அறிவிப்பு.

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாகவும், வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட கொரோனா கட்டுப்பாடுகள் மட்டும் வரும் 1 முதல் 15 வரை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுமா அல்லது தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளின் படி மூடப்பட்டிருக்குமா என்பது குறித்த தெளிவான அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இல்லாததால், பொதுமக்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில், பிப்ரவரி 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க இந்துசமய அறநிலையத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாளை மற்றும் வரும் சனி, ஞாயிறு அன்று வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கான அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்