#BREAKING : முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி… தேர்தல் ஆணையம் ..!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக கட்சிகள், அதிகாரிகளுடன் 2 நாட்களாக ஆலோசனை நடத்திய நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பேட்டியளித்தனர். அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பான கையேடு, வாக்காளர் விழிப்புணர்வு குறும்படத்தை அதிகாரிகள் வெளியிட்டனர்.

பின்னர், தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேசிய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா, அதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளோம். கொரோனா  பரவாத வகையில் தேர்தலை நடத்துவது ஆணையத்தின் நோக்கம். கொரோனா வழிகாட்டுதலுடன் பீகார் சட்ட மன்ற தேர்தல், இடைத்தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.

ஊரகப் பகுதி உட்பட அனைத்துப் பகுதிகளிலும் அனைவரும் வாக்களிக்க செய்வதே இலக்கு. சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினர், அதிகாரிகளுடன் விவாதித்தோம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் மேற்கொள்ள முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

வாக்குச்சாவடி முகாம்களில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படும் எனவும்  80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி செய்து தரப்படும் எனவும் அவர் அறிவித்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.

18 வயதான அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன் வர வேண்டும். தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதே இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை, பணப்பட்டுவாடாவை தடுக்க உறுதியான
நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது என தெரிவித்தார். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவிக்கப்படும். 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேருக்கு மேல் இல்லாதவாறு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

author avatar
murugan