#Breaking:பெட்ரோல்,டீசல் நாளை கொள்முதல் இல்லை – விற்பனையாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது.

இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில்,சென்னையில் 8-வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில்,நாளை ஒரு நாள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல்,டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கலால் வரி குறைப்பின் காரணமாக சில்லறை விற்பனை விலையினை உடனடியாக மாற்றியதால் குறைந்த பட்சம் ரூ.2 லட்சம் முதல் அதிக பட்சம் ரூ.10 லட்சம் இழப்பு ஏற்படுவதாகவும்,இதனால்  நாளை ஒரு நாள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல்,டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை எனவும் பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளது.எனினும்,பொதுமக்களுக்கு பாதிப்பின்றி வழக்கமான முறையில் நாளை பெட்ரோல்,டீசல் விற்பனை தொடர்ந்து நடைபெறும் எனவும் பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

Leave a Comment