#BREAKING: கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்கள், பதவிகளை அறிவித்த திமுக!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள் அறிவிப்பு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த பிப்.19-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்ற, நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

மேயர், துணை மேயர், தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நாளை மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போன்ற உள்ளாட்சி பொறுப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் இடங்கள் மற்றும் பதவிகள்  வெளியிடப்படுகிறது.

  1. அதன்படி, திமுக கூட்டணியில் விசிகவுக்கு கடலூர் துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 நகராட்சி தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 நகராட்சி துணைத்தலைவர், 7 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
  2. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. 1 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத்தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
  3. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1 நகராட்சி தலைவர், 4 நகராட்சி துணைத்தலைவர், 4 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 6 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
  4. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத்தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 6 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
  5. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியும், சேலம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளுக்கு 2 துணை மேயர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 நகராட்சி தலைவர், 9 நகராட்சி துணைத் தலைவர், 8 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 11 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்