தமிழகம் முழுவதும் இன்று பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான  சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.எனினும்,கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு மும்முரமாக நடத்தி வருகின்றது.அதன்படி, ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி கடந்த 10 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இதனையடுத்து,முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள்,முன் களப்பணியாளர்கள்,60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் முடிந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இனி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைதோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ள  நிலையில்,இன்று தமிழகம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான  சிறப்பு முகாம் 600 இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி,காலை 8 மணி தொடங்கி மாலை 5 மணி வரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,சென்னையில் மட்டும் 160 இடங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்றும்,இந்த சிறப்பு முகாம் மூலம் 20 ஆயிரம் நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.