சுதந்திரம் காப்போம்; புதிய இந்தியா படைப்போம்: சிபிஎம் வாழ்த்து

0
117

சென்னை, ஆக. 15-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தி வருமாறு:இந்திய திருநாடு 71-ஆவது விடுதலைத் திருநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். விடுதலைக்காகப் போராடிய நமது முன்னோர்களுக்கு இந்த நாளில் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

விடுதலையை சாத்தியமாக்க போராடிய அவர்கள்கனவு கண்ட அனைவருக்குமான இந்தியாவை உருவாக்க இந்த நாளில் உறுதி ஏற்போம். நவீன இந்தியாவின் தூண்களாக விளங்குகிற ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, பன்மைத்துவம், இறையாண்மை, சுயசார்பு, சாதி பேதமற்ற சமத்துவம் ஆகிய விழுமியங்களின் மீது கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்படும் காலம் இது. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, பல்வேறு மொழிகளைப் பேசுகிற, பல்வேறு பண்பாட்டு வேர்களைக் கொண்ட இந்திய மக்களின் மீது பாசிசப் போக்குடன் ஒற்றைத் தன்மையை திணிப்பதற்கு மத்திய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக முயல்கிறது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட இயக்க மான ஆர்எஸ்எஸ்சின் அரசியல் முகமாக இருக்கிற பாஜக, அதிகாரத்தின் மையப் புள்ளியில்அமர்ந்துள்ளதை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலைத் திணிக்க முயல்கிறது.

பசுப் பாதுகாப்பு என்கிற பெயரில்தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் கொடுந் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி பிற மொழி பேசும் மக்களின் மீது திணிக்கப்படுகிறது. சமூகத்தில் சரிபாதியாக விளங்கும்பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாற்றப்பட்டிருப்பதோடு, பெண்களுக்கு எதிரானபிற்போக்கான கோட்பாடுகள் ஆட்சியாளர் களாலேயே நியாயப்படுத்தப்படுகிறது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் மத்திய அரசு தொடுத்துள்ள தாக்குதலால் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் விடுதலையைத் தொடர்ந்து, பொருளாதார அடித்தளத்தை நிலை நிறுத்த உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு சீர்குலைக்கப்படுகின்றன. மோடிஅரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் கார்ப்பரேட்டுகளின் நலன்களை கருத்தில் கொண்டு மட்டுமேவடிவமைக்கப்படுகிறது.

மறுபுறத்தில், விவ சாயிகள் கடன் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒவ்வொன்றாக அகற்றப்படுகின்றன. தமிழகத்தில் ஆளும் அதிமுக பல அணிகளாக பிரிந்து பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவும், ஊழல் லஞ்ச லாவண்ய நடைமுறையை தொடரவும் போட்டி போடுகின்றனர். ஆனால், அனைத்து அணிகளும் மத்திய ஆட்சியாளர்களிடம் மண்டியிட்டுக் கிடப்பதால் தமிழக நலன் பலி கொடுக்கப்படுகிறது. தமிழகம் வரலாறு காணாத வறட்சியைச் சந்தித்த போதும், மத்திய – மாநில ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கல்வி, சுகாதாரம் மேலும் மேலும் தனியாரிடம் தள்ளி விடப்படுகிறது.

இந்தப் பின்னணியில், சுதந்திரம் என்பதன் உண்மையான பொருளை உணர்ந்து அச்சமற்ற, பசியற்ற, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற, சுரண்டல் இல்லாத இந்தியா வை உருவாக்கு வோம். ஒவ்வொரு நாளும் பிரதமர் மோடி புதிய இந்தியா பிறக்கப்போகிறது என்றுதம்பட்டம் அடிக்கிறார். ஆனால், அவர் கூறும் புதிய இந்தியா பணக்காரர்களிடம் பாசம் காட்டுகிற, எளிய மக்களை வஞ்சிக்கிற இந்தியாவாகவே இருக்கிறது. இதற்கு மாறாக, இந்திய மக்கள் அனைவரையும் சாதி, மதம், மொழி, இனம் கடந்து சமமாக பாவிக்கிற இந்தியாவை உருவாக்கிட விடுதலைத் திருநாளில் உறுதி ஏற்போம். மதச்சார்பின்மை, குடியரசு, கூட்டாட்சி, ஜனநாயகம் போன்ற விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here