‘பேஸ்புக்’ இந்தியா முதலிடம்!!

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக சமீபத்தில் வெளிவந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் 241 மில்லியனாக உயர்ந்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையான 240 மில்லியனை விட அதிகமாக ஒரு மில்லியன் இருப்பதால் இந்தியா முதலிடத்தை பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் 201 மில்லியன் பயனாளிகள் மட்டுமே இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. உலகம் முழுவதும் ஃபேஸ்புக்கில் பயனாளிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை 2 பில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜூலை 13ஆம் தேதி தி நெக்ஸ்ட் வெப் என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி இந்தியாவில் 241 மில்லியன் பயனாளிகள் ஃபேஸ்புக்கை தவறாமல் பயன்படுத்தி வருவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க பயனாளிகளான 240 மில்லியனை ஒப்பிடும்போது இந்திய பயனாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 2 பில்லியன் என்ற அறிவிப்பு வந்த இரண்டு நாட்களிலேயே அமெரிக்காவை விட இந்தியாவில் ஃபேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்ற தகவல் வெளிவந்துவிட்டது. 2017ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் ஃபேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் ஆக்டிவ் பயனாளிகள் அமெரிக்காவை விட இந்தியாவில் இரு மடங்கு என்ற உண்மையையும் தி நெக்ஸ்ட் வெப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆக்டிவ் பயனாளிகள் கடந்த ஆறு மாதங்களில் 27% அதிகரித்துள்ளதாகவும், அதாவது முந்தைய எண்ணிக்கையை விட 50 மில்லியன் அதிகம் என்றும், ஆனால் அமெரிக்காவில் ஆக்டிவ் பயனாளிகளின் எண்ணிக்கை 12% மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author avatar
Castro Murugan

Leave a Comment