ஏ.கே.போஸ் வெற்றிக்கு எதிரான வழக்கு – ராஜேஸ் லக்கானி ஆஜராக உத்தரவு!!

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் வெற்றிக்கு எதிரான வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தேர்தல் நடந்த நேரத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸை அங்கீகரித்து வேட்பு மனுவில், இடதுகை பெருவிரல் ரேகையை பதிவுச் செய்து, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுதொடர்பான அனைத்து ஆவணங்களுடன், மாநில சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடக்கோரி மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் வெற்றிக்கு எதிரான வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆஜராக உத்தரவிட்டனர். ஜெயலலிதா கைரேகை தொடர்பான 24 ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும்போது, வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க தயராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

author avatar
Castro Murugan

Leave a Comment