இரண்டு நாளில் ஆஜராக வேண்டும்! ஓவியாவுக்கு திடீர் சம்மன்

பிக் பாஸ் வீட்டில் நடிகை ஓவியா தற்கொலை செய்ய முயன்றது குறித்து விசாரணை நடத்தக்கோரிய புகாரில் இரண்டு நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என்று காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்ற காட்சி வெளியானது. இது தொடர்பாக விசாரிக்க சட்டப்பொறியாளர் பாலாஜி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரை நசரேத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார். புகார் கொடுத்து சில நாள்கள் ஆகியும் இதுவரை காவல்துறை, ஓவியாவிடம் விசாரணை நடத்தவில்லை.
இது குறித்து தகவல் அறிய பாலாஜி இன்று நேரில் நசரேத்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு இன்ஸ்பெக்டரிடம், தன்னுடைய புகார் குறித்து கேட்டறிந்தார். அப்போது, இதுவரை ஓவியாவிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். மேலும், இரண்டு நாளில் ஓவியாவை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியதாகக் குறிப்பிட்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் கூறுகையில், “ஓவியாவிடம் இரண்டு நாளில் விசாரணை நடத்த உள்ளோம். அப்போது அவர் தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்த விவரம் தெரியவரும். முதல் கட்டமாக ஓவியாவின் மேனேஜரிடம் விசாரணை நடத்தியுள்ளோம்” என்றார்.
சட்டப்பொறியாளர் பாலாஜி கூறுகையில், “நடிகை ஓவியா தற்கொலை முயன்ற வழக்கில் போலீஸார் ஆர்வம் காட்டவில்லை. நான் கொடுத்த புகாருக்கு போனில் விசாரித்ததாகத் தகவல் தெரிவித்தனர். வேறு யாராவது இருந்தால் இப்படி போனில் விசாரிப்பார்களா. என்னுடைய புகாரில் விஜய் டிவி நிர்வாகம், நடிகர் கமல்ஹாசன், நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆகியோர் மீது குற்றம்சாட்டியுள்ளேன். அவர்களிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை. இதனால் மீண்டும் விசாரணை நடத்த இன்று இன்னொரு புகார் மனுவை கொடுத்துள்ளேன்” என்றார்.

Leave a Comment