எங்கே போக்குவரத்து துறை அமைச்சர் ? சிரிக்கும் பிறமாநிலங்கள்

வந்தவாசி: வந்தவாசி போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவு பஸ்கள் போதிய பராமரிப்பின்றி ஓட்டை உடைசலாக காணப்படுகிறது. வருவாய் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு நிர்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அரசு போக்குவரத்து கழகத்திற்கு என இரண்டு பணிமனைகள் உள்ளது. திண்டிவனம் சாலையில் உள்ள பணிமனை எண் ஒன்று, செய்யாறு சாலையில் உள்ள பணிமனைக்கு எண் இரண்டு என அழைக்கப்படுகிறது. இதில் திண்டிவனம் சாலை பணிமனையில் இருந்து சுமார் 45 பஸ்கள் போளூர்வந்தவாசிசென்னை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அவை 148,104,208 என்ற தடம் எண் கொண்டு மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படுகின்றது. இதில் 148 தடம் எண் கொண்ட 40 பஸ்கள் விரைவு பஸ் எனக்கூறி இயக்கப்படுகின்றது. 



இந்த பஸ்கள் வந்தவாசி பணிமனையில் இருந்து இயக்கப்பட்டாலும், பெரும்பாலும் போளூரில் இருந்துதான் சென்னைக்கு புறப்படுகின்றது. இந்த பஸ்கள் சேத்துப்பட்டு, வந்தவாசி, உத்திரமேரூர், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், மதுரவாயல் வழியாக சென்னை கோயம்பேடு செல்கின்றது. இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசலைக்கும் குறைவில்லை. வசூலிலும் குறைவில்லை. இந்நிலையில், 148 தடம் எண் கொண்ட பஸ்கள், விரைவு பஸ் என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. ஆமை வேகம் மட்டுமே செயல்பாடு. போதிய பராமரிப்பின்றி, பஸ்களின் படுமோசமான நிலையே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

உதாரணமாக வந்தவாசி பணிமனையில் இருந்து இயக்கப்படும் டிஎன்250275(148 தடம் எண்) கொண்ட பஸ் பின் பக்க படிகட்டு உடைந்து நசுங்கிய நிலையில் கடந்த 2 நாட்களாக இயக்கப்படுகிறது. வயது முதிர்ந்தவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் இந்த பஸ்சின் படியை சீரமைக்காமல் இயக்குவது பயணிகளின் உயிரை மதிக்காமல் வருமானம் ஒன்றே போதும் என்ற குறிக்கோளுடன் நிர்வாகம் செயல்படுவதை காட்டுகின்றது. நிர்வாகத்திடம் பல தடவை முறையிட்டும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பணியாளர்கள் புலம்புகின்றனர். இந்த குமுறல் மண்டல நிர்வாகத்திடமோ, கோட்ட நிர்வாகத்திடமோ சென்று சேர்வதில்லையாம். எனவே, பழுதடைந்த பஸ்களை பழுது பார்ப்பதோடு எதையும் கண்டுகொள்ளாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment