தன்னை அதிமுக பொறுப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்க முடியாது:டிடிவி தினகரன்

மதுரை: தன்னை அதிமுக பொறுப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீக்க முடியாது என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று மாலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தினகரன் அணி சார்பில் நடத்தப்படுகிறது. இதுகுறித்து தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்று மேலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாபெரும் வெற்றிக் கூட்டமாக அமையும். இந்தப் பொதுக் கூட்டத்திற்கு தொடர்ந்து இடையூறு கொடுக்கப்படுகிறது. அதனை நாங்கள் சமாளிப்போம்.
நீக்க முடியாது
எங்களால் முதல்வராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரைக் கண்டு எங்களுக்கு அச்சம் இல்லை. முதல்வர் பதவியில் விபத்தின் காரணமாக அவர் அமர்ந்திருக்கிறார். அதிமுக பொறுப்பில் இருந்து முதல்வர் என்னை நீக்க முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பாக இன்று மாலை பொதுக்கூட்டத்தில் பேசுவேன்.

சின்னத்தை மீட்போம்
அதிமுகவுக்கு தேவைப்படும்போது அறுவை சிகிச்சை நடைபெறும். சிலர் சுயநலத்திற்காக, விரும்பம் போல் செயல்பட எம்எல்ஏக்களையும், நிர்வாகிகளையும் ஏமாற்றி வருகின்றனர். விரைவில் அவர்கள் பொய் வெளிப்பட்டு விடும். அதிமுகவை ஒன்றுபடுத்தி இரட்டை இலை சின்னத்தை மீட்போம். லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

அதிகாரம்…
அதிகாரம் இருப்பதால் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது நவ துவாரங்களையும் அடக்கி வைத்திருந்தவர்கள். தற்போது தறிகெட்டு ஆடுகிறார்கள்.

மூக்கனாங் கயிறு
நிச்சயம் அவர்கள் திருந்துவார்கள். அல்லது திருத்தப்படுவார்கள். அறுவை சிகிச்சை எப்போது தேவையோ அப்போது செய்து நோயாளியைக் காப்பாற்றிவிடுவோம் என்று தினகரன் கூறினார்.

author avatar
Castro Murugan

Leave a Comment