பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் :இந்தியாவுக்கு சீனாவுக்கும் அட்வைஸ் கூறும் அமெரிக்கா

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. 
இந்த சாலையை அமைக்க அனுமதித்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவி பொருட்களை எடுத்து செல்வது தடைபடும் என்று இந்தியா கருதுகிறது. மேலும் சீனா தன்னிச்சையாக இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இதில் ஏற்கனவே உள்ள நிலையே தொடரவேண்டும் என்று இந்தியா வற்புறுத்தி வருகிறது. 
எங்களது எல்லைக்குள்தான் இந்திய படைகள் அத்துமீறி நுழைந்துள்ளன. எனவே, இந்தியா தனது ராணுவத்தை உடனே திரும்ப பெறவேண்டும் என்று சீனா மிரட்டல் விடுத்து வருகிறது.
இதனால் எழுந்த பிரச்சினையை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 16 -ந்தேதி முதல் டோக்லாமில் இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை குவித்து உள்ளன. இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. 
கடந்த சில நாட்களாக சீன ராணுவம், திபெத் தன்னாட்சி பகுதியில் 18 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் பீரங்கிகளை குவித்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியா சீனா எல்லை விவகாரம் பற்றி அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நாரட் பேசும்போது,
“இரண்டு நாடுகளோடும் அமெரிக்கா நட்பு பேணி வருகிறது. இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment