பாஜக தேசிய தலைவர் நட்டா கார் மீது கல்வீச்சு.. குண்டர்கள் ஆட்சி நடந்ததாக விமர்சனம்!

மேற்குவங்கம் மாநிலத்திற்கு சென்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார் கண்ணாடி மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. இதில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா காரில் சென்றார். அப்பொழுது அவர் சென்ற கார் கண்ணாடி மீது கற்கள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் காரில் இருந்த பாஜக பொதுச் செயலாளர் விஜய் வர்க்கியாக்கு காயம் ஏற்பட்டது.

ஆனால் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் குறித்து பேசிய அவர், இதற்கு முன் இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை என கூறிய அவர், மேற்கு வங்கத்தில் தற்போது சட்டம் ஒழுங்கும் இல்லை, சகிப்பின்மையும் இ்ல்லையென கூறிய அவர், மாநிலத்தில் நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து, குண்டர்கள் ஆட்சி நடந்ததாக தெரிவித்தார். மேலும், குண்டு துளைக்காத காரில் பயணித்ததால் இந்த தாக்குதலில் தனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும், பாதுகாவலர்கள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.

அதுமட்டுமின்றி, பாஜகவின் மூத்த தலைவருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் நிலையை நினைத்துப்பாருங்கள் என்றும், துர்கா தேவியின் ஆசியால் நான் இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பாக வந்துள்ளதாகவும் கூறியுள்ள அவர், குண்டர்கள் ஆட்சியை நாம் தோற்கடிப்போம் என தெரிவித்துள்ளார்.