பிறந்தநாள் விழாவை அறவே தவிர்க்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தனது பிறந்தநாள் விழாவை அறவே தவிர்க்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், தனது பிறந்தநாள் விழாவை அறவே தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம் 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை முடித்துத் திரும்பிய நிலையில், அங்கு மக்களிடமிருந்து பெற்ற உளப்பூர்வமான உற்சாக வரவேற்பில் கிடைத்த மகிழ்ச்சியுடன் இதனை எழுதுகிறேன். தேர்தல் விதிமுறைகளினால் அந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்றாலும், மக்கள் திரண்டு நின்று அன்பைப் பொழிந்தனர். பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் நின்று வாழ்த்தினர். ஆண் ஒருவர் தன் குழந்தையுடன் நின்றார். என்னுடைய வாகனத்தின் வேகம் குறைவதைக் கண்டவுடன் ஆவலுடன் ஓடிவந்து, தன் பெண் குழந்தையின் கையில் ஓர் உணவுப் பொட்டலத்தைக் கொடுத்து, என்னிடத் தரச் சொன்னார்.

சென்னையில் பணிகளை முடித்துவிட்டு, கோவை வந்து, அங்கிருந்து ஈரோடு பயணிப்பதால், தொடர்ச்சியான பணிகளுக்கிடையே நான் சாப்பிட்டிருப்பேனோ இல்லையோ என்ற நினைப்பில், fried rice வாங்கிவைத்து, அதைத் தன் மகள் கையால் கொடுக்கச் செய்த அந்தத் தமிழரின் அன்பினில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வைக் கண்டேன்!

அவருடைய பெண் குழந்தை என்னிடம் உணவுப் பொட்டலத்தைத் தந்ததுடன், “Advance Happy Birthday தாத்தா” என்று வாழ்த்துகளைப் பகிர்ந்த போது நெகிழ்ந்து போனேன்.  அப்போது அங்கே கூடியிருந்த பெண்களும் குழந்தைகளும் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவித்து மகிழ்ந்தனர். என்னுடைய பிறந்தநாளை மக்களின் வாழ்த்துகளால் நினைவுபடுத்திக்கொண்டபோது உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுத்தது.

1953 மார்ச் 1. உலகம் எப்போதும் போல உதயசூரியனின் ஒளிக்கதிர்களுடன் விடிந்தது. அன்னையார் தயாளு அம்மாளுக்கு அன்று சிறப்பான நாள். அவர் தன்னுடைய இரண்டாவது ஆண் குழந்தையை ஈன்றெடுத்திருந்தார். தாய்மையின் அரவணைப்பில் உலகைக் கண்ட அந்தக் குழந்தை, உங்களில் ஒருவனான நான்தான்.

உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உருவானது, பொதுவாழ்க்கைக்கான மேடையில்தான். அதனால், சிறு வயது முதலே பொதுவாழ்வையே முதன்மையாக்கிக் கொண்டேன். கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பைத் தொடங்கி, என் பொதுவாழ்க்கையின் பயணத்தைத் தொடர்ந்தேன். கழகத் தலைவரின் மகன், தமிழ்நாட்டு முதலமைச்சரின் மகன் என்ற அடையாளத்தைப் பின் தள்ளி, இயக்கத்தின் தொண்டன் என்ற முறையிலேயே என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணித்தது.

ஆட்சிப் பொறுப்பில் நாம் அமர்வதற்கு முன்பு, அரசியல் களத்தில் நமக்கு எதிர்நிலையில் இருப்பவர்கள், என் மீது எண்ணற்ற விமர்சன அம்புகளை எய்தார்கள். இப்போதும் எய்கிறார்கள். கழகத்தின் மீது வதந்திகளைப் பரப்பினார்கள். பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள். பொல்லாங்கு பேசினார்கள். என்னைவிட என் மீது அக்கறையாக ஜோதிடம் – ஜாதகம் எல்லாம் கணித்தார்கள். அவை எதுவும் என்னைத் தளரச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக அவை எனக்கு உரமாகி என்னைத் தழைக்கச் செய்தன. மேலும் மேலும் என்னை உழைக்கச் செய்தன. மக்களின் நம்பிக்கையைப் பெருக்கிடச் செய்தன. அதன் விளைவுதான், மக்களின் தீர்ப்பு நம் கையில் ஆட்சிப் பொறுப்பை வழங்கியது.

என்னுடைய 70-ஆவது பிறந்தநாள் என்பது அதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு என்பதைத்தவிர, வேறு வகையான ஆடம்பரங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நான் ஒருபோதும் விரும்புவதில்லை. பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை இப்போதல்ல, இளைஞரணிச் செயலாளராக இருந்தபோதிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

எளிமையான முறையில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி, ஐம்பெரும் கொள்கை முழக்கமிட்டும், ஏழை – எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும். கழகத்தினர் எது செய்தாலும், துரும்பைத் தூணாக்கி விமர்சனங்களுக்குக் காத்திருக்கும் எதிர்த்தரப்பினருக்கு கொஞ்சமும் இடம்தராமல் எளிய முறையில் நிகழ்வுகளை நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment