கேரளாவில் கைது.. சென்னை அழைத்துவரப்பட்டு மீரா மிதுனிடம் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை!

கேரளாவில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனை சென்னை அழைத்துவரப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டியலினத்தோரை குறித்து இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று கைது செய்தனர். அங்கு நெருங்கிய ஒருவருடைய நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் தங்கி இருந்தாக தகவல் கிடைத்ததை அடுத்து உடனடியாக சென்னை சைபர் க்ரைம் போலீசார் நேரடியாக அங்கு சென்று கைது செய்தார்கள்.

மீரா மிதுனுவை கைது செய்யும்போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு எதிராக காவல்துறையினர் அராஜகம் செய்வதாகவும், காவல்துறை என் மீது கை வைத்தால் நான் கத்தியால் குத்திக்கிட்டு செத்து போய்டுவேன் என ஒரு பரபரப்பான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டியிருந்தார்.

இந்த நிலையில் கேரளா நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர் செய்து (TRANSIT WARRANT) பெற்றுக் கொண்டு, போலீஸ் வாகனம் மூலமாக, தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டார். அழைத்துவரப்பட்ட மீரா மிதுனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் மீரா மிதுனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரை அடுத்து நடிகை மீது பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்பி தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்