ஸ்டெர்லைட் ஆலை போராட்ட கருத்து – ரஜினிகாந்த் ஆஜராக சம்மன்

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடிக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூற சென்றபோது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, போராட்டத்தில் சமூக விரோதிகள் போராட்டத்தில் உள்ளே புகுந்துள்ளனர். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகி விட்டனர் எனக் கூறினார்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்பியது அருணா ஜெகதீசன் ஆணையம். ஜனவரி 19-ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள விசாரணை ஆணையத்தில் ரஜினி ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.